தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை.. மக்கள் கவலை..!

webteam

காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான புரட்டிபோட்டு சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தின் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. இதைத்தொடர்ந்து மழை படிப்படியாக குறைந்து கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது.

இந்நிலையில், நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்வதால் மக்கள் அவதியுற்றுள்ளனர். ஏற்கெனவே கஜா புயலுக்கு வீடுகளை பறிகொடுத்த மக்கள் மெல்ல மெல்ல இப்போதுதான் நிவாரண முகாம்களில் இருந்து தங்களது வீடுகளை நோக்கி செல்கின்றனர். தற்போதும் மழை தொடர்வதால் அது அவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரண பொருட்கள் வழங்கி வரும் இந்த சமயத்தில் மழை பெய்வதால் பணிகள் பாதிக்கப்படும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. திருச்சி, பெரம்பலூர், மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.