Delhi high court File photo
தமிழ்நாடு

அதிமுக முடிவுகளை அங்கீகரிக்க இபிஎஸ் தொடர்ந்த மனு: வழக்கு முடித்துவைப்பு!

“மூல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொழுது எவ்வாறு தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக் கொள்ள முடியும்?”- ஓபிஎஸ் தரப்பு வாதம்

webteam

அதிமுக பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனுவை முடித்து வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடி அதிமுகவின் பல்வேறு சட்ட விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் நீக்கப்பட்டு மீண்டும் பொதுச் செயலாளர் பதவி கொண்டு வரப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

இது தொடர்பான மூல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில் பொதுக்குழு முடிவுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதனை உடனடியாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

EPS

இந்த மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் “கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளோம். எனவே இதற்காக கட்சி விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனை மேலும் காலதாமதம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என வாதம் முன்வைக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், “மூல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொழுது எவ்வாறு தேர்தல் ஆணையம் இதனை ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க பத்து நாள் அவகாசம் தேவைப்படுவதாக கூறினார். ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதும் இதே போல பத்து நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் ஆணையத்தின் வாதங்களை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் பத்து நாள் அவகாசத்தை வழங்கி வழக்கை முடித்து வைத்தது.