கோவையில் காணாமல் போன 12 வயது சிறுமி மீட்க பட்டு விட்ட நிலையில், சிறுமியின் எதிர்காலம் கருதி அவரது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவர்கள் தாங்களாகவே நீக்கி விடுமாறு கோவை மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கோவையில் நேற்று முன்தினம் காணாமல் போன சிறுமி நேற்று இரவு பொள்ளாச்சி அருகே பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் கோவையில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறுமியின் அடையாளங்கள் குறித்து வெளியில் பகிர வேண்டாம் என கோவை மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கோவை மாநகர், இ1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் 17.05.2023 ஆம் தேதியன்று 12 வயதுடைய சிறுமி காணாமல் போனது தொடர்பாக சிறுமியை விரைவாக கண்டுபிடிக்க வேண்டி நல்லெண்ண அடிப்படையில் அவரது புகைப்படத்தை பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். மேற்படி சிறுமி காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணையில் அச்சிறுமியை 18.05.2023 ஆம் தேதி பொள்ளாச்சியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோர் வசம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், மேற்படி சிறுமியின் எதிர்காலம் கருதி அவர் காணாமல் போனது தொடர்பாக அவரது புகைப்படத்துடன் பகிரப்பட்ட பதிவுகளை சமூகவலைத்தளங்களில் இருந்து பொதுமக்கள் தாங்களாக நீக்கி கொள்ளுமாறும், மேலும் இனிவரும் காலங்களில் யாரும் இச்சிறுமி காணாமல் போன செய்தியை பகிர வேண்டாம் எனவும் கோவை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.