திருவண்ணாமலையில், நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அரசு அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலாவதியான ஏராளமான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, திருவண்ணாமலை நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தோம். காலாவதியான தேதிக்கு பின்னர் விற்பனை செய்த உணவு பொருட்கள், குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் டீ தூள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து தரமற்ற மற்றும் காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்.
அதிக விலைக்கு விற்பனை மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரும் நோக்கில், பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் புகார்கள் தெரிவிக்க 94440 42322 என்ற எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தால் 24-மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து காலாவதியான மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும். பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்தியாளர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.