நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என தகவல் வெளியானது.
இந்நிலையில் பாஜக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. ஆனால் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கோவை தொகுதி வேட்பாளரின் பெயரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அது பாஜக தொண்டர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி, கடந்த 7 ஆம் தேதி 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பின்னர் 6 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் இதுவரை தமிழகத்திற்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் உள்ளது. அதற்கு சில உள்கட்சி விவகாரம் தான் காரணம் என கூறுகின்றனர்.
இதனால் தமிழகத்தில் நடைபெறயுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வருகிறது. இதனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.