தீபாவளி பண்டிகைக்கு 4300 கோடி ரூபாய் வரை பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைவாகவே நடந்துள்ளது. 70 சதவீத பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் நாடு முழுவதும் சுமார் 4300 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் கணேசன் பஞ்சுராஜன் தெரிவித்தார்.
வழக்கமாக ஆண்டுதோறும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில், கொரோனோ பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதித்ததால் தொடர்ந்து 2வது ஆண்டாக 4300 கோடி ரூபாய் அளவிலான பட்டாசுகள் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முழுமையான வர்த்தகம் நடைபெறும் நம்பிக்கையோடு அடுத்த தீபாவளி பண்டிகைக்கான உற்பத்தி பணியை துவக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.