நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சிறப்புக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், இன்றைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான சி.விஜயாபஸ்கர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது அவருக்கும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், உயர்க்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் க.பொன்முடி ஆகியோருக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது. அதுகுறித்த விரிவான விவரங்கள், இங்கே:
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல் அழுத்தம் ஒருபுறம் - சட்டப்போராட்டம் ஒருபுறம் என சீறிய முயற்சியை மேற்கொண்டு வந்தது.
`முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்’
என்பதற்கு ஏற்ப, நாம் அனைவரும் ஒன்றாக ஒரே சிந்தணையால் (நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்) இன்று ஒன்றுகூடியுள்ளோம். இங்கு நான் வரலாற்றிலிருந்து சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். அதில் முதன்முதலாக சொல்ல நினைப்பது 1984-ல் நுழைவுத்தேர்வென்ற பழக்கம், வழக்கத்துக்கு வந்தது என்பதை. அந்த நுழைவுத்தேர்வு முறையை, 2005-ல் அதிமுக அரசுதான் தன் ஆட்சியில் நிறுத்தியது” என்றார்.
இதற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டு, “பேரவை உறுப்பினரின் இந்தக்கூற்று அடிப்படை ஆதாரமற்றது. 2006-ல், திமுக ஆட்சியில் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, நீதிமன்றத்துக்கு சென்று, அன்றைய முதல்வர் கருணாநிதிதான் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வைத்தார். ஆக அது திமுக ஆட்சியில் வந்ததுதான். ஒருவேளை நுழைவுத்தேர்வு முன்முடிவை 2005- ஆண்டில் அதிமுக யோசித்தது வேண்டுமானால் பார்த்திருக்கலாம். ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுத்து நிறைவேற்றியது, திமுகவின் கலைஞர் கருணாநிதி ஆட்சியில்தான்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய சி.விஜயபாஸ்கர், “ஜூன் 2005-ல், உயர்க்கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அதிமுக சார்பில் ‘நுழைவுத்தேர்வு வேண்டாம்’ என சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து, மாணவியொருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த விசாரணையின்போது, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்தானது. அந்த நேரத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் வந்தபின்னர், திமுக அரசு மற்றுமொரு சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தது. அதில் சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது. பின் அச்சட்டத்தைதான் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு திமுக அரசு கொண்டு சென்றது. ஆகவே இச்சட்டம் அதிமுக சார்பில் வந்ததுதான்” என்றார்.
இதற்கு பதிலளித்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, “1984-ல் தான் நுழைவுத்தேர்வு வந்தது என்பதை, பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கரே ஒப்புக்கொண்டு உள்ளார். அது யாருடைய ஆட்சி என்பதையும் அவர் நினைவுகூர்ந்த்தால் நல்லது” என்றார்.
இதற்கு உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், “நான் நுழைவுத்தேர்வு குறித்தும், அதன் எதிர்ப்பு குறித்தும் இந்த அவையில் நினைவுகூற காரணம், அதிமுக எப்போதுமே நீட் விலக்கிலும் - நுழைவுத்தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஷயத்திலும் உறுதியாக இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகத்தான். ஏனெனில் அண்மைகாலமாக ‘அரசியல் லாபத்துக்காக அதிமுக தனது இக்கொள்கையிலிருந்து விலகுவதாகவும், நழுவுவதாகவும்’ வெளியே பலரும் பேசுகின்றனர். அப்படி அதிமுக எந்தச் சூழலிலும் யாருக்கும் வளைந்துக்கொடுக்கவோ, நெளிந்துக்கொடுக்கவோ செய்யாது. அப்படியான இணங்கிப்போகும் இயக்கம், அதிமுக இல்லை. ஆகவே நீட் கொள்கையில், எங்கள் நிலைப்பாடு `நீட் வேண்டாம்’ என்பதுதான். அன்று (அதிமுக ஆட்சிக்காலம்) முதல் இன்றுவரை இதற்கான அரசியல் அழுத்தம் கொடுப்பதிலும், சட்டப்போராட்டம் தொடங்குவதிலும் நாங்கள் தீவிரமாக உள்ளோம். அதற்காகவே இன்று இங்கு நாங்கள் இக்கூட்டத்திலும் கலந்துள்ளோம்.
புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்தும் அதிமுக பேசியதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அதிமுக குரல் கொடுத்ததால் தான், அந்த மசோதா பாராளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அவர்களாலும் பேசப்பட்டது. இந்த நீட் தேர்வை முதன்முதலில் கொண்டு வந்தது, காங்கிரஸ், 2010-ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. அதை யாரும் மறக்கமுடியாது” என்றார்.
இதற்கு குறிக்கிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, “நாங்கள் நாகரீகத்தை கருத்தில் கொண்டு, இந்த அவையில் அரசியல் பேசாமல் இருக்கிறோம். உண்மைக்கு புறம்பாக பேச வேண்டாம்” என்றார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிக்கிட்டு, “நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்காகத்தான் இன்று இவ்வளவு தூரம் பேசிக்கொண்டுள்ளோம். ஏற்கெனவே கடந்த காலங்களில் பல விவாதங்களில் நீட் விலக்கு குறித்தும், இம்மசோதா குறித்தும் பல அரசியல் விஷயங்களை பேசியுள்ளோம். அவற்றின் முடிவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டும் உள்ளது. இன்று அதை பேசுவதற்கான நேரம் இல்லை. இன்று நாம் கூடியிருப்பது அதற்காகவும் இல்லை. இன்று ஒருமனதாக இந்த நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு சிறு குறிக்கீடும், கரும்புள்ளியும் வந்துவிடக்கூடாது. அதுவே என் விருப்பம். இதற்கு மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த இடத்தில், அதிமுகவை சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் பல விஷயங்களை சொன்னார். அவை அனைத்துக்கும் சேர்த்து, ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். இன்றைக்கு (இந்த ஆட்சியில்), நீட் விலக்கை ஆளுநர் திருப்பி அனுப்பிய இரண்டாவது நாளே நாங்கள் அதற்கு எதிர்வினையாற்றி நடவடிக்கையெல்லாம் எடுக்கிறோம். ஆனால் உங்கள் ஆட்சியின்போது, இதேபோன்றதொரு மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆளுநரிடம் இருந்து அம்மோசாதா குடியரசு தலைவருக்கும் அனுப்பப்பட்டது. அவர் அதை திருப்பி அனுப்பினார். ஆனால் அவர் திருப்பி அனுப்பியதே, ஒரு வருடம் கழித்துதான், பேரவை உறுப்பினர்களான எங்களுக்கே தெரியவந்தது. அதுவும், நீதிமன்ற பிரச்னையால்தான் வெளியே வந்தது. இதற்கு என்ன பதிலளிக்க போறீர்கள்?” எனக்கூறி பிரச்னையை முடித்துவைத்தார்.
இதற்கு பதிலளித்த சி.விஜயபாஸ்கர், தொடர்ந்து நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டுவந்தது குறித்து பேசினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமடைந்து, பேசத்தொடங்கினர். இதைத்தொடர்ந்து, பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் மேற்கொண்டு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன், “இப்போது நீ - நான் எனக்கூறி பழைய விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தால், பிரச்னை வளரத்தான் செய்யும். இதுபோன்றவற்றையெல்லாம் ஏற்கெனவே பேசிவிட்டோம். இன்று கூடியிருப்பது, வேறு காரணத்துக்காக. இன்றைய கூட்டத்தின் நோக்கத்தை மறந்து விடவேண்டாம்” எனக்கூறி அனைவரையும் சமாதானப்படுத்தி அடுத்த நிகழ்வுக்கு வழிவகுத்தார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உரை தொடங்கியது.
தொடர்புடைய செய்தி: ”வெளியே போக இவ்ளோ பில்டப் வேண்டாம்”- பேரவையில் சபாநாயகர் பதிலும் பாஜக வெளிநடப்பும்!