நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிகிறது. கடந்த 13 நாட்களில் 70 காசுகள் சரிந்து 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 3 ரூபாய் 80 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைந்து 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 22-ம் தேதி 4 ரூபாய் 30 காசுகளாக இருந்த முட்டை பண்ணை கொள்முதல் விலை 23-ம் தேதி 25 காசுகளும், 26-ம் தேதி 25 காசுகளும் குறைந்து 3 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் 20 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை 13 நாட்களில் 70 காசுகள் வரை விலை குறைந்துள்ளது. விற்பனை குறைந்து முட்டை தேக்கம் அதிகரித்துள்ளதால் விலை குறைந்திருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.