தமிழ்நாடு

தமிழகத்தில் குறையும் நிலக்கரி கையிருப்பு: மாற்று வழிகளை யோசிக்கும் மின்வாரியம்

கலிலுல்லா

நிலக்கரியை கொண்டுவருவதற்கு கப்பல்களில் இடம் கிடைக்காததால் தமிழ்நாடு மின்சார வாரியம் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது.

ஒடிசாவின் பாரதிப் துறைமுகத்தில் கப்பல்களில் இடம் கிடைக்காத நிலை இருப்பதால் தமிழகத்திற்கு நிலக்கரியை கொண்டுவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது. இந்த அனல் மின்நிலையங்களில் வழக்கமாக 15 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருக்கும் நிலையில் தற்போது 5 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் அனல் மின்நிலையங்களுக்கு தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்ற நிலையில் தற்போது 40 ஆயிரம் டன் நிலக்கரிதான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரியை பெறும் அளவும் 1,500 டன்னாக குறைந்துள்ளது. நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதன் காரணமாக சேமிப்பு கருதி சில மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கோடையில் மின் நுகர்வு அதிகரிக்கும் என்பதால் அதனை சமாளிக்க மாற்று வழிகளையும் மின்சார வாரியம் ஆலோசித்து வருகிறது. கோடையில் சில நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக்ததில் நாள் தோறும் 15 ஆயிரத்து 600 மெகாவாட் அளவிற்கு மின் தேவை உள்ள நிலையில் 3ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே அனல்மின்நிலையங்களில் இருந்து பெறப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஓடிசாவின் பாரதிப் துறைமுகத்தில் மார்ச் 15ஆம் தேதி தனியார் நிறுவனம் ஒன்று திறக்கப்பட உள்ளதால் கப்பல்கள் கிடைத்து நிலக்கரி கொண்டுவருவது இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.