தமிழ்நாடு

திருச்சி: பள்ளியில் சக மாணவர்களுடன் தகராறு.. காயத்தால் உயிரிழந்த மாணவர்! நடந்தது என்ன?

திருச்சி: பள்ளியில் சக மாணவர்களுடன் தகராறு.. காயத்தால் உயிரிழந்த மாணவர்! நடந்தது என்ன?

webteam

அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்துள்ள தோளூர்பட்டியைச் சேர்ந்தவர் கோபி, இவருக்கு திருமணமாகி பெரியக்காள் என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இவர்களது 2-வது மகன் மௌலீஷ்வரன் தொட்டியம் அடுத்துள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவன் மௌலீஷ்வரன் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மௌலீஸ்வரனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்த மௌலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த தொட்டியம் போலீசார், 3 பள்ளி மாணவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மாணவனின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவனின் உடல் பிரேத பரிசோதனையின் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மாணவனின் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனை செய்யும் அறையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர்கள் சம்மதத்தினர். இதனையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனை, இன்று காலை 10 மணியளவில் துவங்கி மதியம் 2 மணியளவில் முடிவுற்றது. அதன்பின் மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முசிறி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் மாணவனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் கவனக் குறைவாக செயல்பட்ட பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர்கள் ராஜேந்திரன், வனிதா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.