மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி திணிப்பு| தலைவர்கள் கண்டனம்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

சென்னை தூர்தர்ஷனில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Prakash J

'பொதிகை' என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கிவந்த தூர்தர்ஷனின் தமிழ் பிரிவு தொலைக்காட்சி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 'டிடி தமிழ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக, இதன் லோகோ காவி நிறத்தில் வெளியானதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், 'டிடி தமிழ்' சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அந்தக் கடிதத்தில், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து, 18-10-2024 அன்று நிறைவடையும் 'இந்தி மாத' நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை தாம் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமைதாங்கி நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கேரளா|பிரிவுபசாரத்தின்போது ஊழல் குற்றச்சாட்டு! வேதனையில் அதிகாரி துயர முடிவு; மகள்கள் இறுதிச்சடங்கு!

மேலும் அதில், “இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்பதை தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிடி தமிழ் நிகழ்ச்சியில் இந்தி மாதம் கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுகவின் மாணவரணி சார்பில் இன்று பிற்பகல் போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: ”நாம் பேசலாமா?”- பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்புவிடுத்த பிரபல நடிகை!