பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் 4 ஆயிரம் +2 மாணவர்களுக்கு, முகக்கவசம்,கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை பிளஸ்மேக்ஸ் நிறுவனத்தின் குரூப் மேனேஜிங் டைரக்டர் டத்தோ பிரகதீஸ்குமார் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியைச் சேர்ந்தவர் டத்தோ பிரகதீஸ்குமார். மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிளஸ்மேக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் சொந்த ஊரான பூலாம்பாடி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது 3 லட்ச ருபாய் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கினார் டத்தோ பிரகதீஸ்குமார்.
இந்த நிலையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால் தற்போது பள்ளி செல்லும் +2 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்களை தனது சொந்த செலவில் வாங்கி தர திட்டமிட்டார் டத்தோ பிரகதீஸ்குமார். அதன்படி பூலாம்பாடி அரசுமேல்நிலைப்பள்ளியில் பயிலும் +2 மாணவர்கள் 55 பேருக்கு முகக்கவசம், கிருமிநாசினி, சோப் உள்ளிட்டவைகளை வழங்கி பாதுகாப்புடன் இருந்து கல்வி பயிலுமாறு கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுபள்ளிகளில் பயிலும் சுமார் 4000 மாணவர்களுக்கும் வழங்குவதற்காக முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவைகள் மாவட்ட முதன்மைகல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தார். தனது சொந்த முயற்சியால் தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் டத்தோ பிரகதீஸ்குமாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- ஆ.துரைசாமி