கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தை 1 தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 2011 -ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2011-ல் சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தை 1 தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
பொங்கல் பண்டிகையின்போது நியாய விலை அட்டைதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் கொண்ட துணி பையில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்ட துணிப்பை குறித்த போட்டோ வெளியாகி உள்ளது. என்றாலும்கூட, 2022-ஆம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை தேதிகளில் சித்திரை 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி: 2022-ல் 22 நாள்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
இந்த குழப்பம் குறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழ்ப் புத்தாண்டு தேதியை, தை 1 என மாற்றுவது குறித்து இதுவரை அரசு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என தெரிவித்தனர்.