தமிழ்நாடு

தஷ்வந்த்க்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தஷ்வந்த்க்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்

webteam

பெற்ற தாயை கொலை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குன்றத்தூர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணை முடிந்து அவர், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். முன்னதாக விசாரணை முடிந்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் இருந்து தஷ்வந்த் அழைத்து வரப்பட்ட போது உறவினர் ஒருவர் அவரை தாக்க முயன்றார்.

சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திடம், பெற்ற தாயை கொலை செய்த வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர் கொலை நடந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று சம்பவம் குறித்து தனிப்படைக் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, தனது தாயை சுத்தியலால் அடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டதாகவும், தந்தையையும் கொல்ல திட்டமிட்டதாகவும் தஷ்வந்த் கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு உதவிய தாஸ், டேவிட் ஆகிய இருவரை புழல் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்திடம் முழு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, அவரை போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர். பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளதால் மீண்டும் குண்டர் சட்டம் பாயும் எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணையையும் இந்த மாத இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.