ஆளும் கட்சியினரால் உயிருக்கு ஆபத்து என மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி விட்டு விடுமுறையில் சென்ற குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர், ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக 60 நாட்கள் ஈட்டா விடுப்பில் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அக்கடிதத்தில், ஆளுங்கட்சியினர் செய்யாத வேலைகளையும் சேர்த்து ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கின்றனர். மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விதிமுறைகள் மீறியுள்ளதாகவும், சூரிய மின்விளக்கு வைப்பதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. அஜண்டாவில் இல்லாத தீர்மானங்களை நிறைவேற்றியதாக அதிகாரியை கையெழுத்து போடச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். இதனால், விதிகளை மீறி கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன ரத்து செய்துள்ளார்.
இதனால் தனக்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுப்பதால் தன்னால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. தனக்கு இயற்கை அல்லது செயற்கையாக ஆளும் கட்சியினரால் மரணம் ஏற்படலாம். எனவே 60 நாட்கள் ஈட்டா விடுப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக அரசு அலுவலர் ஒருவர் நீண்டகால விடுப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.