தமிழ்நாடு

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி... சென்னை ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்..!

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி... சென்னை ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்..!

Rasus

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், ஹோட்டல்களில் உணவு தயாரிப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேடி அலையும் மக்கள் கூட்டம்... நேரம் காலம் பார்க்காமல், இரவிலும் தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள்... தண்ணீர் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள், சாலைமறியல்கள். இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. இந்த தண்ணீர் இல்லா திண்டாட்டத்தின் தாக்கம் உணவு விடுதிகளையும் விட்டு வைக்கவில்லை. ஆம், அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் உணவகங்களுக்கு சென்று உணவு உட்கொள்ளும் சூழலில் அங்கும் உணவு தயாரிக்கவே போதிய தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தெருவோர கடைகளும், சிறுசிறு ஹோட்டல்களும் மூடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில்‌ உள்ள ஒரு‌ உணவகத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்காக உணவக நிர்வாகம் ஒரு அறிவிப்பு பலகையை மாட்டியுள்ளது. " தண்ணீர் இல்லாததால் உணவு தயாரிக்கமுடியாத நிலை ஏற்படலாம். வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்பதே அந்த அறிவிப்பு‌ ஆகும்.

அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளதால் ஹோட்டலின் வருவாயில் இருந்து 25 சதவீதம் தண்ணீர் வாங்குவதற்கே சரியாக இருப்பதாக கூறும் உணவக மேலாளர், அதன் காரணமாகவே வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் தெரிவித்து பலகை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தண்ணீர் இல்லாததால் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தண்ணீர் பிரச்னையை தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.