தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: சட்டவிரோத மின் வேலிகளால் மனித உயிர்கள் பலிபோகும் அபாயம்

கள்ளக்குறிச்சி: சட்டவிரோத மின் வேலிகளால் மனித உயிர்கள் பலிபோகும் அபாயம்

kaleelrahman

விலங்குகளை விரட்ட வைக்கப்படும் மின்வேலிகளால் மனித உயிர்கள் பலிபோவதும் தொடர்கதையாகி விட்டது. திருக்கோவிலூரை அடுத்து மதுராந்தகத்திலும் மின்வேலியால் ஓர் உயிரிழப்பு நிகழ்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மேலந்தல் கிராமத்தில் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் உயிரை பறித்துள்ளது மின்வேலி. மரவள்ளித் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் வராமல் இருக்க பாஸ்கர் என்பவர் அமைத்த மின்வேலியில் 30 வயதான காசிநாதன் என்பவர் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

மகன் இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் அவரது தந்தை சுப்ரமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் மின்வேலி அமைத்த பாஸ்கரை கைது செய்தனர். இதேபோல் மதுராந்தகம் அருகே எலித் தொல்லையால் வைக்கப்பட்ட மின்வயர் மற்றொரு இளைஞரின் உயிரை பறித்துள்ளது.

மதுராந்தகத்தை அடுத்துள்ள ஒழுப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா, ஜனார்த்தனன் ஆகியோர் தங்கள் நெற்பயிர்களை எலிகள் நாசம் செய்வதால் அவற்றை ஒழிக்க வயல்வெளியில் மின்வேலி அமைத்திருந்தனர். 750 குதிரைத் திறன் கொண்ட மின்சாரம் பாயும் மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடி வயல்வெளி மின்கம்பத்தில் இணைத்துள்ளனர். இதையறியாது அந்த வழியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தார்.