தமிழ்நாடு

கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் தலித் மாணவர்கள்

கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் தலித் மாணவர்கள்

webteam

ராமேஸ்வரம் அருகே அரசுப்பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்களை கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்துள்ளது. துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மெய்யம்புளி மீனவ கிராமத்திலுள்ளது மண்டபம் ஊராட்சி ஒன்றியப்பள்ளி. இங்கு பயிலும் 115 மாணவர்களில் 30 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சில மாணவர்கள் பள்ளியில் கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கழிவுநீரின் துர்நாற்றத்தால் 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட சமூக மாணவர்களை மட்டும் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து துப்புரவுப்பணிகளில் ஈடுபடுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து பள்ளியில் கேட்டால் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்திவிடுவதாக ஆசிரியர்கள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. சமத்துவத்தை போதிக்க வேண்டிய பள்ளியிலேயே, சாதிபாகுபாடுகளை விதைப்பது வேதனையளிப்பதாகக் கூறும் பெற்றோர், இனியும் இதுபோல் நடக்காமல் மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை சகாயசாமிலாவிடம் கேட்ட போது, கழிவுநீர்த்தொட்டி நிறைந்து துர்நாற்றம் வீசியது உண்மை என்றும், ஆனால் மாணவர்களை சுத்தம் செய்ய சொல்லவில்லை என்றும் கூறினார். மேலும், மாணவர்களே துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பினாயில் ஊற்றியதாகவும் தெரிவித்தார். இந்தப் புகார் குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, இதுகுறித்து விசாரிக்கப்படும் என உறுதியளித்தார்.