தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கு கடந்தவந்த பாதை

சொத்துக்குவிப்பு வழக்கு கடந்தவந்த பாதை

webteam

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் மறைவை தொடர்ந்து‌ வழங்கப்படும் இந்த தீர்ப்பு சசிகலாவின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த‌ இந்த வழக்கு கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கலாம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரையிலான ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் 66 கோடியே 65 லட்சத்து 42 ஆயிரத்து 318 ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டு. வருமானத்திற்கு பொருந்ததாத வகையில் சொத்து குவிப்பதற்கு ஜெயலலிதாவிற்கு உள்நோக்கத்துடன் உதவி செய்ததாக அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன் வைத்த பாரதிய ஜனதா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, 1996ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2003ஆம் ஆண்டில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ததை தொடர்ந்து கர்நாடகத் தலைநகர் பெங்களூருவுக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. பல்வேறு காரணங்களால் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு அக்டோபரில் நேரில் ஆஜராகி 1300-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

2013ஆம் ஆண்டு ஜூனில், தொடங்கிய வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள், 2014 ஆகஸ்ட் 28ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்தன. இதையடுத்து, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அதே ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நான்கு பேரும், கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மற்றும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததால், அக்டோபர் 17ஆம் தேதி 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 21 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் ஜாமீனில் விடுதலையாகினர்

2014 ஆம் ஆண்டு டிசம்பர்18ஆம் தேதி, ஜெயலலிதா, சசிகலாவின் ஜாமீனை 2015 ஏப்ரல் 18 - ம் தேதி வரை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அப்போது, மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக தனி நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், அந்த வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. வழக்கு முடிந்த ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, 2015 மே 11ம் தேதி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். ‌

பின்னர் அதே ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, முதல் புகார் தாரர் சுப்பிரமணியன்சுவாமி மற்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டு கடந்த ஜூன் 7ம் தேதி தீர்ப்பை ஒத்திவைக்கப்பட்டது.