கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது. அதேபோல் அரபிக்கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படும் எனவும் எச்சரித்திருந்தது.
இதையடுத்து அரபிக்கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்ட நிலையில், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்த கேரள அரசு வரும் 5-நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடையும் விதித்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் 4000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
அதேபோல் 2-மாத தடை காலத்திற்குப் பிறகு நேற்று முதல் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விசை படகுகளும் கரை திரும்பியுள்ளது.