சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பல மாதங்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மீண்டும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர்.
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்காததால் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தற்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாபயணிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அதேப்போன்று கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா பயணிகள் கடலில் பயணிக்கும் வகையில் படகு போக்குவரத்திற்கும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் இல்லாத நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை கன்னியாகுமரி பகுதி வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.