Tragedy pt desk
தமிழ்நாடு

கடலூர்: வாக்களிக்கும் போது ஏற்பட்ட வாய்த்தகராறு - 11 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பெண் பலி

webteam

செய்தியாளர்: K.R.ராஜா

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்ரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (47), அவரது மனைவி கோமதி (43), மகன்கள் ஜெயபிரகாஷ் (24), சதீஷ்குமார் (22), தம்பி ஜெய்சங்கர் (45) ஆகியோர் நேற்று மாலை வாக்களித்துவிட்டு வீட்டுக்கு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 11 பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் மரக்கட்டையால் அவர்களை தாக்கியுள்ளது. இதில் கோமதி உட்பட ஐந்து பேருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

Govt Hospital

இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல்நலம் மோசமாக இருந்த கோமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கோமதி உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த முன்விரோதம் காரணமாகவும், வாக்களிக்கும் போது ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாகவும் 11 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக கணவன் கண் முன்னே மனைவியும், மகன்கள் கண் முன்னே தாயையும் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.