தமிழ்நாடு

வட இந்தியர் அடித்துக்கொலை - வாட்ஸ் அப்பில் வலம் வந்த வீடியோவால் 6 பேர் கைது

webteam

கடலூர் மாவட்டத்தில் திருட முயன்ற வட இந்தியரை அடித்து கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் காசிக்கடை பஜாரில் 45 வயது மதிக்கத்தக்க வட இந்தியர் ஒருவர் மயங்கி கிடப்பதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மயங்கிக் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது இறந்தவர் அப்பகுதியில் திருட முயன்றதும் அதனால் பொதுமக்கள் அவரை தாக்கியதும் தெரியவந்தது.

இந்நிலையில், அந்த வட இந்தியரை பொதுமக்கள் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வந்தது. இதையறிந்த போலீசார் அந்த வீடியோவை வைத்து தாக்கியவர்களை அடையாளம் கண்டனர். அந்த வீடியோவில் பொதுமக்கள் தாக்கும்போது ’சாச்சி போத்தானு’ என அவர் தெலுங்கில் கத்துகிறார். அதற்கு ’நான் இறந்துடுவேன்’ என அர்த்தம். 

இதுகுறித்து கடலூர் சிறப்பு காவல் ஆய்வாளர் கூறுகையில், இந்த வழக்கில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் ரமேஷ், சண்முகம், பாலமுருகன், சுரேஷ், செல்வகுமார், வாகிசன், ஆகிய 6 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.