செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
மழை வெள்ளத்தாலும் இயற்கை சீற்றத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டு, பல விஷயங்களில் பின்தங்கியுள்ளது கடலூர் மாநகராட்சி. இங்கு தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஆட்சித் தலைவராலும், புதிய மாநகராட்சி ஆணையாளராலும் இனி வளர்ச்சி பாதை உருவாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி.ஆதித்யா செந்தில்குமார் ஐஏஎஸ் மற்றும் கடலூர் மாநகராட்சியின் ஆணையராக அனு ஐஏஎஸ் ஆகிய இருவரும் புதிதாக பொறுப்பேற்றனர். இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில், என்எல்சி நில கையகப்படுத்தும் பிரச்னை, பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் பிரச்னை, விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு நான்கு வழிச் சாலை முடிவுபெறாத பணிகளால் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், முறையான பேருந்து நிலையம், கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன.
அதேபோல் மாநகர மக்களின் குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை என பல எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், கடலூர் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிறது.
புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையரும் இணைந்து, கடலூர் மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக உருவாக்க நிச்சயமாக முயற்சி செய்வார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.