பத்மநாபன், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

கடலூரில் அதிமுக நிர்வாகி படுகொலை - “திமுக ஆட்சியில் கொலை மாநிலமாக தமிழ்நாடு” - இபிஎஸ் விமர்சனம்

கடலூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பாகூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் கொலை மாநிலமாகிவிட்டது என சாடியுள்ளார்.

PT WEB

கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (50). அதிமுக வார்டு செயலாளரான இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். பெயிண்டிங் தொழில் செய்து வரும் இவர், ரியல் எஸ்டேட் தரகராகவும் செயல்பட்டு வருகிறார்.

நேற்று முன் தினம் திருப்பனாம்பாக்கத்தில் நடந்த கோயில் திருவிழாவில் பத்மநாபன் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி பாகூர் இருளன் சந்தை சாலை வழியாக தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை காரில் பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பத்மநாபனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவரை சரமரியாக வெட்டி விட்டு  தப்பிச் சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பத்மநாபன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், பத்மநாபன் மீது கொலை உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது. அதேநேரத்தில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, பத்மநாபன் கொலைக்கான காரணம், முன்விரோதமா? அல்லது அரசியலா? என இரு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை நகர்த்தி வருகின்றனர்.  இதில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் கும்பலுடனான முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்ற ரீதியிலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்றும், இது கொலை மாநிலமாகிவிட்டதாகவும் விமர்சித்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பில்லை. பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தினம்தோறும் கொலை நடக்காத நாளே இல்லை. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் கொலை மாநிலமாக காட்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை, காங்கிரஸ் மாவட்டச் செயலாளராக ஜெயக்குமார் என கட்சித் தலைவர்கள் முதல், கட்சி நிர்வாகிகள் வரை சமீபகாலமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தை உலுக்கி வருகிறது.