ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் குவிந்துள்ளது.
கடந்த 3 வாரங்ளாக ஞாயிறு ஊரடங்கு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டதால், அன்றைக்கு தேவையான மீனையும் பொதுமக்கள் சனி அன்றே கடைகளில் வாங்கிக்கொள்ள வேண்டிய சூழல் நிலவி வந்தது. இந்த வாரம் ஞாயிறு ஊரடங்கு இல்லாததையடுத்து இன்றே நேரடியாக மக்கள் கடைகளுக்கு வந்து இறைச்சி வாங்கி வருகின்றனர்.
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று அனைத்து மீன் வகைகளின் விலையும் 50 முதல் 100 ரூபாய் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். சங்கரா மீன் 1 கிலோ 250 ரூபாய், வஞ்சரம் மீன் 700 ரூபாய், சின்ன வஞ்சரம் 500 ரூபாய், மத்தி 250 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது, ஒரு கட்டு நண்டு 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன் வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைக்கு வரும் மக்கள் கிட்டத்தட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்தே வருகின்றனர். எனினும் குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கடைகள் அருகருகே இருப்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.