தனது மகளின் திருமணத்துக்கு கார், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், பல கோடி மதிப்புள்ள சீர்வரிசை, ஆடு மாடுகள், 200 பவுன் நகை என்று ஆச்சர்யத்துடன் அசத்தியுள்ளார் மதுரை அதிமுக பிரமுகர்.
ஊரைக்கூட்டி வெகு விமர்சையாக திருமணம் செய்ய வேண்டும் என்று பெண்ணைப்பெற்ற அத்தனை அப்பாக்களுக்கும் ஆசையும் கனவும் இருக்கும். அதனை கண்குளிர, காண்போர் வியக்க செய்து காட்டியுள்ளார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியைச் சேர்ந்த தமிழரசன் கடந்த முறை மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவாகவும், தற்போது மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும், மதுரை மாவட்ட ஆவின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இவரது மகளான ஆர்த்தி என்பவருக்கும், மதுரை கொடிமங்கலத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருடைய மகன் வெற்றிவேலுக்கும், மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 4ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு மணமகள் தரப்பில் டிராக்டர், விலை உயர்ந்த கார், இரண்டு இருசக்கர வாகனங்கள், குத்துவிளக்கு, டிவி, கட்டில் பிரோ உள்ளிட்ட சீர்வரிசை பாத்திரங்கள், அரிசி மூட்டைகள், என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது, வெள்ளிப்பாத்திரங்கள் தொடங்கி வெண்கல பாத்திரங்கள் வரையிலும் அரிசி மூட்டை தொடங்கி அத்தனை மளிகைப் பொருட்களுக்கான மூட்டைகள், ஆடுகள், மாடுகள் என பலவிதமான சீர்வரிசையால் மண்டபமே நிரம்பி வழிந்தது.
இத்தனை செய்து, 200 பவுன் தங்க நகைகளால் மகளை அலங்கரித்து திருமண விழாவை விமர்சையாக்கியுள்ளார் முன்னாள் எம்எல்ஏ. இந்த திருமணத்தையும், சீர்வரிசைகளையும் கண்டவர்களும், கேட்டவர்களும் ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கிறார்கள். சமூக ஊடகங்களோ மீம்ஸ்களால் களைகட்டவைத்திருக்கின்றன