கும்பகோணம் அனைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் சுற்றித்திரிவதால் மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், பருவமழைக்கு முன்பு மதகின் அருகே தேங்கியிருந்த குட்டையில் ஏராளமான முதலைகள் வசித்து வந்தன. இதனால் அப்பகுதிக்கு மீன்பிடித் தொழிலாளர்கள் செல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றில் இருந்த முதலைகள் அடித்துச் செல்லப்பப்பட்டிக்கும் என்று மீனவர்களும், பொதுமக்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.
ஆனால் வெள்ளத்தால் முதலைகள் அடித்துச்செல்லப்படாமல், குட்டையில் இருந்து வெளியேறி ஆற்றுக்குள் வந்துவிட்டன. இவை அவ்வப்போது கரையேறி மக்களை அச்சுறுத்துகின்றன. இதனால் மீன் பிடித்தொழிலையே நம்பியுள்ள, அப்பகுதி தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். ஆற்றில் சுமார் 35க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கலாம் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்த முதலைகளை வனத்துறையினர் உடனே பிடித்து முதலைகள் சரணாலயத்தில் விட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.