Crocodile pt desk
தமிழ்நாடு

தஞ்சை: விவசாய தோட்டத்திற்குள் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு – வனத்துறை எச்சரிக்கை

திருவிடைமருதூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது. முதலையை மீட்ட வனத்துறையினர், கொள்ளிடம் ஆற்றில் பத்திரமாக விட்டனர்.

webteam

செய்தியாளர்: கு.விவேக்ராஜ்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொள்ளிடம் ஆற்றில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் ஆற்றில் வசிக்கும் முதலைகள் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையத் தொடங்கியுள்ளன.

Forest Dept

அப்படி அணைக்கரையை ஒட்டிய கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவைச் சேர்ந்த காந்திராஜ் என்பவரது தோட்டத்திற்குள் முதலை புகுந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற வனவர் சண்முகம் தலைமையிலான வனக்காவலர்கள் குழு, காந்திராஜா வீட்டிற்கு சென்றுள்ளது.

அங்கே வீட்டின் பின்புறம் இருந்த 3 அடி நீளமுள்ள முதலையை கயிறு கட்டி பிடித்தனர். இதையடுத்து அந்த முதலையை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர்.

இது தொடர்பாக வனத் துறையினரிடம் கேட்டபோது... “கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளது. வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளதால் கொள்ளிடம் ஆற்று நீர் கடும் வெப்பமாகிறது. ஆகவே முதலைகள் அதில் வசிக்க முடியாமல் வெளியேறி ஊருக்குள் நுழைந்திருக்கலாம்.

எனவே கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், கொள்ளிடம் ஆற்றுக்குள் யாரும் இறங்க வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.