அரசுப் பள்ளிகளில் மோட்டிவேஷ்னல் பேச்சு என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நடிகர் தாமு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பேசிய பேச்சிற்கே எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் பள்ளியில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு தற்பொழுது கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், மோட்டிவேஷனல் பேச்சு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அதாவது, பாவ, புண்ணியம், முற்பிறவி போன்றவற்றை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசினார். குருகுலக் கல்வி குறித்து பேசுகிறார், அறிவியலுக்கு புறம்பான பல விஷயங்களை போகிற போக்கில் பேசிக் கொண்டே இருக்கிறார்.
“ஒரு சிலர் கண் இல்லாம பொறக்குறாங்க, வீடில்லாம பொறக்குறாங்க, பல நோய்களோட பொறக்குறாங்க.. இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டியது தானே ஏன் படைக்கவில்லை? ஒருத்தன் கோடீஸ்வரனா இருக்கான், ஒருத்தன் ஏழையா இருக்கான்.. ஒருத்தன் இப்படி இருக்கான்.. ஒருத்தன் அப்படி இருக்கான்.. ஒருத்தன் கிரிமினலா இருக்கான் ஒருத்தன் நல்லவனா இருக்கான்.. ஒருத்தன் ஹீரோவா இருக்கான் ஒருத்தன் ஹீரோ மாதிரி இருக்கான். ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்க என்ன செஞ்சீங்களோ அதைப் பொறுத்துதான் இந்த ஜென்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆசிரியர் ஒருவர் குறுக்கிட்டார்.
அதாவது, “இது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் பேச்சா அல்லது ஆன்மீக சொற்பொழிவா? மறு பிறவி பற்றி பேசுறீங்க, கர்மா பற்றி பேசுறீங்க” என்று அந்த ஆசிரியர் கேட்டதும் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று உரத்த குரலில் அவர் கேட்கிறார். ‘இது தப்பு’ என்று அந்த ஆசிரியர் சொல்கிறார். மறுபிறவி பற்றி ஏன் சொல்கிறீர்கள் என்று அந்த ஆசிரியர் கேட்டதற்கு மறுபிறவி பற்றி யார் சொல்லிக் கொடுப்பார்கள்.. என்று பதில் கூறுகிறார். எதற்கு ஆன்மீக சொற்பொழிவு என்று கேட்டதற்கு ஆன்மீகம் என்றால் என்ன என்று விதண்டாவாதமாக அந்தச் சொற்பொழிவாளர் ஆசிரியரிடம் கேட்கிறார்.
மேலும், ”அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக் கூடாது என்று யார் சொன்னது? எந்த சட்டம் சொல்கிறது? சிஇஓ-க்கு மேல நீங்க அறிவு பெற்றவரா?” என்று அடித்துப் பேசுகிறார். அத்துடன், “பாவ புண்ணியத்தை பற்றி பேசாமல் எப்படி ஒருவனுக்கு வாழ்வியலைப் பற்றி போதிக்க முடியும்.. பாவ புண்ணியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றால் நிறைய பாவம் செய்வான்.. நீங்க சொல்லிக் கொடுப்பீங்களா பாவ புண்ணியத்தை பற்றி” என்றும் அந்த சொற்பொழிவாளர் திமிராக கூறுகிறார்.
அவர் சொற்பொழிவு ஆற்றியதன் விளைவை, ஆபத்தை மாணவிகள் இறுதியில் சொன்ன வார்த்தைகள் மூலம் காண முடிந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர். ‘நமக்கு மேல ஒருத்தங்க இருக்காங்கனு நெனச்சிட்டு இருந்தோம். ஆனால், நமக்குள்ளே இறைவன் இருக்கிறான் என்பதை இப்பொழுதுதான் புரிஞ்சுகிட்டேன்.” என்று ஒரு மாணவி கூறுகிறார்.
‘அடிப்படை கல்வி தாண்டி, ஒளியாய் ஜோதி வடிவமாய் அறிவுக்கு எட்டாத ஒன்று இருக்கு என்று நான் புரிஞ்சு கொண்டேன்’ என்று மற்றொரு மாணவி சொல்கிறார். இதுதான் மிகவும் அபாயகரமானது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கல்வியின் மீது ஆர்வம் பெறும் பொருட்டு சொற்பொழிவு நிகழ்வுகள் நடத்துவதில் தவறில்லை. ஆனால், அது மாணவ, மாணவிகளை சரியான வழியில் கொண்டு செல்வதாக அறிவியல் பாதைக்கு இட்டுச் செல்வதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகள் இருக்கும். அதனை பரப்புரை செய்யும் உரிமையும் அவருக்கு இருக்கிறது. சட்டமே அந்த உரிமைகளை அனுமதிக்கிறது. ஆனால், பள்ளிகள் அதற்கு ஏற்ற இடமில்லை. குறிப்பாக அரசுப் பள்ளிகள்.
அந்த ஆன்மீக சொற்பொழிவாளர் தன்னுடைய நம்பிக்கைகளை சொல்வதற்கு பல வழிகள் இருக்கிறது. அதனை அவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால், அரசுப் பள்ளியில் இதுபோன்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது பள்ளியின் தவறே. தட்டிக்கேட்ட ஆசிரியரைத்தான் மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்கிறார்களே தவிர இது தவறு என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை.
பள்ளிகள் என்பது எல்லா நம்பிக்கைகளையும் கடந்து அறிவின் பாதையில் மாணவர்களை கொண்டு சென்று சமுதாயத்திற்கு ஏற்றவர்களாக அவர்களை மாற்றும் இடம். ஆனால், இது போன்ற நிகழ்வுகள் தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும். பள்ளிக் கல்வித்துறை இதனை கவனம் செலுத்தி பார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கல்வித்துறையில் மிகவும் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருகிறது. எண்ணற்ற அறிவியல் விஞ்ஞானிகளை அரசுப் பள்ளிகள் கொடுத்துள்ளது. மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் போன்ற பலரை நம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய மிகப்பெரிய பாரம்பரியம் மிக்க அரசுப் பள்ளிகள் மீது கறை படியாமல் பார்த்துக் கொள்வது அரசின் கைகளில் உள்ளது என்பது பலரது வலியுறுத்தலாக உள்ளது.