தமிழ்நாடு

உடற்பயிற்சிக் கூடங்கள் மூடலால் நெருக்கடி - வாடகை தர முடியாமல் உரிமையாளர்கள் வேதனை!

உடற்பயிற்சிக் கூடங்கள் மூடலால் நெருக்கடி - வாடகை தர முடியாமல் உரிமையாளர்கள் வேதனை!

sharpana

கொரோனா 2 ஆம் அலையால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக உடற்பயிற்சிக் கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதால் வாடகை கொடுக்க முடியாமலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் தவித்து வருகிறார்கள் உடற்பயிற்சிக் கூடங்களின் உரிமையாளர்கள். 

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக உடற்பயிற்சி கூடங்களை முழுமையாக மூட வேண்டும் என்ற அறிவிப்பால் மீண்டும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள் உரிமையாளர்கள். கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில் புதிய அறிவிப்பு தங்களுக்கு கூடுதல் சுமை என்கின்றனர். ஏற்கனவே கடன் பெற்று ஜிம் நடத்தும் பலரும் வாடகை கொடுக்க முடியாமல், ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாமல் இருப்பதாக கூறுகிறார்கள்.

சென்னையில் மொத்தம் 3 ஆயிரம் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளநிலையில், இவற்றை நம்பி சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பணிபுரிவதாகக் கூறும் உடற்பயிற்சிக்கூட உரிமையாளர்கள், தங்களின் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் என்று கூறுகிறார்கள். கடந்த ஆண்டு முழு முடக்கத்தால் சென்னையில் 500 ஜிம்கள் நடத்த முடியாமல் முழுமையாக மூடப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் மூடும் அறிவிப்பால் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும், இயங்கும் நேரத்தை குறைத்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதும் உடற்பயிற்சிக்கூட உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.