ஜல்லிக்கட்டுக்கு போட்டிகளுக்கு இனி எக்காலத்திலும் நீதிமன்ற தடை வராதபடி என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் தெளிவுடுத்த வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைருவமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் நம்பிக்கையைப் பெறாத நிலையில், ஒரு சட்டம் எவ்வளவு தான் பாதுகாப்பானதாக இருந்தாலும்- தற்காலிகமாக உரிமைகளை மீட்பதாக இருந்தாலும் அது நடைமுறைப் பயனைத் தராது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, முதலமைச்சர், அவசர சட்டமே நிரந்தர சட்டம் என்று சொல்வதை தவிர்த்து போராட்டக்காரர்களின் கோபம் தணியும் வகையில், நிரந்தரத் தீர்வுக்கு வழிகாணும் வகையில் மாநில அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது, அதற்கு மத்திய அரசின் சட்ட ஒத்துழைப்பை எந்த அளவு பெற்றிருக்கிறது, இனி எக்காலத்திலும் நீதிமன்றத் தடை வராதபடி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இந்த அவசர சட்டம் உதவும் என்பதையும், அடுத்த ஆண்டு முதல் நிரந்தர சட்டம் வாயிலாக, தடையின்றிப் போட்டிகள் நடைபெறும் என்பதையும் விளக்கி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஆவன செய்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறவும், நிரந்தர அமைதி நிலவவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.