தமிழ்நாடு

பனை, தென்னை, பாக்கு, வாழை கழிவுகளிலிருந்து கலை கைவினைகள் !

பனை, தென்னை, பாக்கு, வாழை கழிவுகளிலிருந்து கலை கைவினைகள் !

webteam

கோடை விடுமுறை குழந்தைகளின் கலை நயத்தை கூட்டும் வகையில் மதுரையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நடைபெற்ற கைவினைப் பயிற்சிப்பட்டறையில் பனை,தென்னை,பாக்கு,வாழை கழிவுகளிலிருந்து பல்வேறு வகையான கைவினை பொருட்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கிராப்டி என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட அந்த பயிற்சிப்பட்டறையின் சிறப்பு பனை,தென்னை,பாக்கு,வாழை மரக்கழிவுகளிலிருந்து அழகிய பொருட்களை உருவாக்குவது தான். புதுச்சேரி மணல் சிற்பக் கலைஞர் உமாபதியுடன், அவரது  மாணவர்கள் சிலர் இணைந்து இந்த பயிற்சியை வழங்கி குழந்தைகளின் கலை நயத்தை வெளிபடுத்தியுள்ளனர். 

பறையடிக்கும் மனிதன், விலங்குகள், பறைவைகள், பல வகையான மாட்டுவண்டி என எத்தனை எத்தனை கற்பனைகள். அவற்றிற்கு உயிர் கொடுத்தது இந்த பயிற்சிப்பட்டறை. பயிற்சியில் தாங்கள் செய்த பொருளோடு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் மாணவிகள். பயிற்சியில் பங்கேற்ற குழந்தைகள் பயிற்சி நேரம் முடிந்தும் நகர மறுத்தது மகிழ்ச்சியைத் ஏற்படுத்தியதாக ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா சிலாகித்தார்.

பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளை நோக்கி மட்டுமே மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், “கலை என்பதும் மிகப்பெரும் துறைதான் அதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வாரிக்கொள்ளத்தான் ஆளில்லை அதை நோக்கியும் கவனம் செலுத்தினால் மனமும்,வாழ்வும் வளமாகும்” என்று மணல் சிற்பக் கலைஞர் உமாபதி கூறுகிறார். 

கோடை விடுமுறை என்றதும் ஊருக்குச் சென்று உறவினரைப் பார்க்கும் பழக்கம் காணாமல் போய் காலம் பல ஓடிவிட்டது. இந்நிலையில், பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையியல், மரக்கழிவுகளைக் கொண்டு மனம் கவரும் கலைப்பொருட்களை செய்ய கற்றுத்தந்தது இந்த பயிற்சிப்பட்டறை என்றால் மிகையல்ல.