செய்தியாளர்: மணிகண்டன்
தீபாவளி மாதம் தொடங்கிவிட்டது... புத்தாடைகள் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ.. பட்டாசுகள் அனைவரது நினைவிலும் மத்தாப்பை பற்ற வைத்துவிடும்.. பட்டாசுகளுக்கு பெயர் போன சிவகாசியில், இந்த தீபாவளிக்கான புதுவரவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இந்த மாத இறுதியில் கொண்டாடப்பட உள்ளது தீபாவளி பண்டிகை. இப்போதே பரபரப்பாகிவிட்டது விருதுநகர் மாவட்டம். சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன.
பட்டாசு விற்பனை மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் லியோ துப்பாக்கி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகியுள்ளன. கிஃப்ட் பாக்ஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் கிஃப்ட் பாக்ஸ்களுக்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் கூறுகிறார் பட்டாசு விற்பனையாளர்.
சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனை தொடங்கி இருப்பினும், ஒரு வாரத்திற்கு பிறகே விற்பனை ராக்கெட் வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நொடிகளில் கண்கவர் காட்சிகளை காட்டி கரியாக விழுந்தாலும் ஒவ்வொரு தீபாவளிக்கும் புத்தம் புது பட்டாசுகள் மீதான ஆர்வம் மக்களுக்கு குறைந்தபாடில்லை.