தமிழ்நாடு

வேகமெடுத்துள்ள கொரோனா பரவல் - மீண்டும் பொதுமுடக்கம் அமலாகுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள்!

வேகமெடுத்துள்ள கொரோனா பரவல் - மீண்டும் பொதுமுடக்கம் அமலாகுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள்!

rajakannan

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பின் பொதுமுடக்கமும் மீண்டும் அமலுக்கு வர உள்ளது என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் கடந்த ஆண்டின் பெரும்பகுதி பொதுமுடக்கத்திலேயே கழிந்துவிட்டது. கடந்த ஆண்டின் இறுதியில் ஓரளவு கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், படிப்படியாக தளர்வுகளும் அளிக்கப்பட்டது. பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தீவிரம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஒரு நாளின் கொரோனா தொற்று இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் இந்த எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பராமரிப்பு மையங்கள் தயார் நிலையிலும், சென்னை அத்திப்பட்டில் பிரத்தியேக கோவிட் பராமரிப்பு மையம் 6000 படுக்கைகளுடன் 100 நோயாளிகளுடன் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. வரும் நாட்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றே கணிக்கப்படுகிறது. அதற்கேற்றவாறு கொரோனா தடுப்பு சிகிச்சையில் முழு கவனம் செலுத்தும் பணிகள் மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படியான சூழலில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவுக்குப் பிறகு, பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பத் தொடங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் மீண்டும் ஒரு பொதுமுடக்கம் மக்களை பொருளாதார ரீதியாக வெகுவாக பாதிக்கும் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும், கொரோனா தடுப்புக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக விதிக்கப்படலாம் என்றும் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இரவு நேர ஊரடங்கு, அரசியல், மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தடை போன்றவை மீண்டும் அமலாகலாம் என கூறப் படுகிறது.

கொரோனா தொற்று உடையவர்கள் வசிக்கும் Containment zone எனப்படும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தல் முடிந்ததும் சகல நடைமுறைகளும் கடுமையாக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு Work From Home முறையில் பணியாற்ற ஊழியர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பரிசீலிக்கலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் Work From Home முறையில் பணியாற்றலாம் என அரசின் சார்பில் உத்தரவிடப்பட வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.