தமிழ்நாடு

தமிழக மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் : தீவிரப் பணியில் கைதிகள்

தமிழக மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் : தீவிரப் பணியில் கைதிகள்

webteam

தமிழகத்தில் உள்ள சென்னை புழல், திருச்சி மற்றும் கோவை மத்திய சிறைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக மத்திய சிறைகளில் உள்ள கைதிகளில் டைலரிங் வேலை தெரிந்தவர்களுக்காக பிரத்யேக தையல் மிஷன்கள் உள்ளன. அதில் அவர்கள் சட்டைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால், முகக்கவசம் தயாரிக்கும் பணிகளில் சிறைக் கைதிகள் இறங்கியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.10 லட்சத்திற்கு எலாஸ்டிக், முகக்கவசம் செய்ய பயன்படும் துணிகள் வாங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது பல கைதிகளுக்கும் தையல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 8 லட்சம் முகக்கவசங்களை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முகக்கவசம் தயாரிக்கும் கைதிகளுக்கு காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பணி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற பின்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 10,000 முகக்கவசங்களை கைதிகள் தயாரிப்பார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.