செய்தியாளர்: பிரவீண்
கோவை சாய்பாபா காலனி காவல் நிலைய போக்குவரத்து தலைமை காவலர் பாலமுருகன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேக்கரிக்கு டீ குடிக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த பேக்கரியில், தனியார் மருத்துவமனை செவிலியர்கள் சிலர் தேநீர் அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அவர்களை காவலர் பாலமுருகன் தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. அதனைக் கண்ட பெண்கள் கூச்சலிடவே பாலமுருகன் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.
அப்போது பாலமுருகனை துரத்திப் பிடித்த நிலையில், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அதில், பெண்களை புகைப்படம் எடுத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இது தொடர்பாக விரிவாக விசாரிக்க துணை ஆணையருக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட துணை ஆணையர் ஸ்டாலின், போக்குவரத்து தலைமை காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.