தமிழ்நாடு

அத்திவரதர் குறித்து அவதூறாக பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

அத்திவரதர் குறித்து அவதூறாக பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

webteam

கோவையில் இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து அவதூறாக பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் சிறுமுகையிலுள்ள காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன். கடந்த மாதம் 29ஆம் தேதி கோவை நவ இந்தியா பகுதியில் நடந்த திராவிடம் 100 என்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய காரப்பன், இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. 

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, கடந்த 19ஆம் தேதி இந்து முன்னணியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் கோவை மாநகர பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, சமூக நல்லிணக்கத்துக்கு சவால் விடும் வகையிலும், மத வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய காரப்பனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 21ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின்படி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத உணர்வை தூண்டுதல் (505(1)(b)), குறிப்பிட்ட மதத்தை குறித்து இழிவாக பேசுதல் (295(a)) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவுகளும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளாகும். அதனால் விரைவில் காரப்பன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. தான் பேசிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டும் காரப்பன் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.