கடந்த ஓராண்டில் மேட்டுப்பாளையம் பகுதி யானைகளால் அதிகம் சேதமடைந்திருப்பது வனத்துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 1,806 முறை ஊருக்குள் யானைகள் ஊடுருவியுள்ளன. அதில் 1,667 முறை மிக ஆபத்தான சூழலில் யானைகள் வனத்திற்குள் விரட்டப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் மட்டும் 626 முறை, யானைகளின் ஊடுருவலால் விளைநிலங்கள் நாசமாகியுள்ளன.
கரும்பு, தென்னை, பாக்கு, சோளம் என மேட்டுப்பாளையத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 43 சதவிகித பயிர்கள் யானைகளின் ஊடுவலால் நாசமாகியுள்ளன. அத்துடன் யானை-மனித மோதல் சம்பவங்கள் மட்டும் கடந்த ஓராண்டில் 5,166 முறை நடைபெற்றுள்ளன. இதில், கடந்த ஓராண்டில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதேபோல், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலிகள் உள்ளிட்ட காரணங்களால் 22 யானைகள் உயிரிழந்துள்ளன.