தமிழ்நாடு

‘கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்.. போலீசில் தஞ்சம்’ வாழ்க்கையை தேடும் காதல் ஜோடி

webteam

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டி மாலையும், கழுத்துமாக காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(25). சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் வினிதா(24). இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

மேலும், சாதி மாறி திருமணம் செய்தால் முத்துக்குமாரை கொலை செய்வதாகவும் மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட வினிதா தப்பித்துச் சென்று, முத்துக்குமாரை கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த வினிதாவின் உறவினர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறி காதல் ஜோடி காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு அளித்தனர்.

இதனிடையே மகளை காணவில்லை என பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சங்ககிரி போலிசார் காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர். இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய உதவி ஆணையர், இருவரையும் புலியகுளம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.