தமிழ்நாடு

பெண் தொழிலாளியைக் கொன்ற யானைகள் விரட்டியடிப்பு

webteam

வால்பாறையில்‌ பெண்ணை தாக்கிக் கொன்ற காட்டு யானைகளை வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கடந்த 28ஆம் தேதி காட்டு யானை தாக்கியதில் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். தேயிலைத் தோட்டத்தில் நுழைந்த 2 காட்டு யானைகளில் ஒன்று வேலையில் ஈடுபட்டிருந்த அழகம்மாள் என்ற பெண்னைத் தாக்கியது. இதனால் தோட்டத்தில் இருந்த அனைவரும் அலறியடித்து ஓடினர். படுகாயமடைந்த பெண் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பின்னர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து போராடி வந்தனர். இருப்பினும் அழகம்மாளை தாக்கிய காட்டு யானைகள் தேயிலைத் தோட்டங்களில் சுற்றித்திரிந்தன. இந்த நிலையில் வனத்துறையினர், தாய்முடி எஸ்டேட் பகுதியில் சுற்றி வந்த 7 காட்டு யானைகளை நீண்ட போராட்டத்திற்குப் பின் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.