தமிழ்நாடு

சொத்தை பெற்றுக்கொண்டு தாயை உதறிய பிள்ளைகள் - வென்றது நீதிப் போராட்டம்

webteam

கோவையில் சொத்தை எழுதி வாங்கிய பின்னர், தாயை பராமரிக்காமல் விட்ட மகன்களுக்கு மாவட்ட நிர்வாகம் தக்க பாடம் கற்பித்தது.

கோவை மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள். அண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்ட இவர், தான் சுயமாக சம்பாதித்த நிலத்தினை மகன்களுக்கு பத்திரப்பதிவு செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். அதன்பிறகு தன்னை, மகன்கள் முறையாக பார்த்துக் கொள்வதில்லை என கூட்டத்தில் அவர் புகார் அளித்திருந்தார். முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்து தர வேண்டுமெனவும் மனு கொடுத்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மேற்கொண்ட நடவடிக்கையில், பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 பிரிவு 23 படி,  கணவரை இழந்து வாழ்ந்து வரும்  பாலம்மாள் தன்னுடைய மகன்களுக்கு எழுதிக்கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டது.

பாலம்மாளின் மகன்காளாகிய சசிகுமார், முருகானந்தம் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் மாதம் தலா 3,000 ரூபாய் வீதம் பாலம்மாள் உயிரோடு இருக்கும் வரை அவருக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.