தமிழ்நாடு

‘நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ - நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி

‘நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ - நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி

webteam

கோவை நீதிமன்றத்தில் மத்திய சிறைக் கைது சட்டையைக் கழற்றி, தனக்கு சிறையில் கொடுமை நடப்பதாக கதறினார்.

கோவை காந்திமா நகரை சேர்ந்தவர் சஞ்சை ராஜா (26). இவர் கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர சில அடிதடி வழக்குகளும் இவர்மீது உள்ளன. அவ்வாறான ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சஞ்சை ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றபோது, நீதிமன்ற வளாகத்திலேயே சட்டையை கழற்றி ‘என்னை ஜெயில்ல கொடுமை பன்றாங்க. கொடுமைய யாரச்சும் கேளுங்க. முன்பகைய மனசுல வச்சுகிட்டு சிறை அதிகாரி காட்டுத்தனமா அடிக்கிறாரு’ கதறினார். 

மேலும் தர்ணாவிலும் ஈடுபட முயன்றார். அவரை காவல்துறையினர் தடுத்து அழைத்து சென்றனர். குறிப்பாக சிறைக் காவல் கண்காணிப்பாளர் என்மீது உள்ள கோபத்தில், தனிமை சிறையில் தன்னை அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தன் உடம்பில் இருந்த காயங்களைக் காண்பித்தும், அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். காயங்களால் அவதிப்படும் தனக்கு மருத்துவ வசதி வேண்டும் என்றும், சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டுக்கொண்டே சென்றார். 

இதுதொடர்பாக கைதி சஞ்சையிடம் கேட்டபோது, கடந்த சில நாட்களாக கோவை மத்திய சிறையில் கைதிகள் துன்புறுத்தப்படுவதாகவும், அதனாலேயே உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறினார். தனக்கும் அந்த நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளதாக அவர் பயத்துடன் கூறினார். முன்னதாக தனது கோரிக்கைகளை மனுவாக 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அவர் அளித்தார்.

கோவை மத்திய சிறை உட்பட தமிழகத்தில் உள்ள பல சிறைகளில் கைதிகள் தற்கொலை மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.