தமிழ்நாடு

சிறையில் விசாரணை கைதி கொலை : 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

சிறையில் விசாரணை கைதி கொலை : 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

webteam

கோவை சிறையில் விசாரணை கைதி கொலை தொடர்பாக 2 வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அடிதடி வழக்கில் கைதானார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருடன், விஜய் என்ற 19 வயது கைதியும் அடைக்கப்பட்டிருந்தார். சிறையின் 3ஆவது டவர் பிளாக் பகுதியில் அவர்களின் அறை அமைந்துள்ளது. மன உளைச்சல் காரணமாக கைதிகள் இருவரும், சிறையில் உள்ள மருத்துவரிடம் மனநல ஆலோசனை பெற்று வந்தனர். ஒரே அறையில் தங்கியிருந்தபோதும், இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறை வளாகத்தில் திடீரென ரமேஷும், விஜய்யும் கடுமையாக சண்டையிட்டுள்ளனர். அருகில் இருந்த பெரிய கல் ஒன்றை எடுத்த கைதி விஜய், மற்றொரு கைதியான ரமேஷை பலமாக தாக்கியுள்ளார்.

தலையில் படுகாயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட காவல்துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரமேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சிறை வார்டன்கள் முனுசாமி , கருப்பசாமி ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.