High court branch pt desk
தமிழ்நாடு

“விஏஓ, போலீசாருக்குத் தெரியாமல் உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகள் எப்படி செயல்படும்?” - நீதிமன்றம் கேள்வி

"வி.ஏ.ஓ மற்றும் போலீசாருக்கு தெரியாமல் உரிமம் இன்றி பட்டாசு ஆலைகள் எப்படி செயல்படுகின்றன என்பது ஆச்சரியமளிக்கிறது" என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: இ.சகாய பிரதீபா

பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி மனு:

விருதுநகர் வெள்ளூரில் உரிமம் இல்லாத பட்டாசு ஆலையில் கடந்த ஜனவரி 27ல் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் என்பவர் மீது ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதேபோல், தாயில்பட்டியில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி உரிமம் இன்றி ஒரு வீட்டில் பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார், பாஸ்கரன் என்பவர் மீது வழக்கு பதிந்தனர். இவர் முன்ஜாமின் கோரியும், கைதான பெரியார் ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்தனர் .

firecracker factory explosion

விபத்து நடந்த பின்பே வி.ஏ.ஓக்கள் புகார் அளித்துள்ளனர்

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளில் நடந்த 2 விபத்துக்களில் ஒருவர் இறந்திருக்கிறார். அந்த பகுதி வி.ஏ.ஓ.க்களால் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விபத்து நடந்த பின்பே வி.ஏ.ஓக்கள் புகார் அளித்துள்ளனர். வி.ஏ.ஓக்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் வசிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆமத்தூர் போலீசில் புகார் அளித்த வி.ஏ.ஓ, அந்த கிராமத்தில் வசிக்கவில்லை. விபத்து குறித்து கிராம உதவியாளருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற வி.ஏ.ஓ, போலீசில் புகார் அளித்தார். இதனால் புகார் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

‘மனிதனுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் தீங்கு’

வி.ஏ.ஓ மற்றும் போலீசாருக்குத் தெரியாமல் உரிமம் இன்றி பட்டாசு ஆலைகள் எப்படி செயல்படுகின்றன என்பது ஆச்சரியமளிக்கிறது. சட்டவிரோத பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும். ரசாயனங்கள், வெடிமருந்துகளை, நாட்டு வெடி குண்டுகள் பிற வெடி பொருட்கள் தயாரிக்க தவறாக பயன்படுத்தப்படலாம். இது மனிதனுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் .

firecracker factory explosion

‘நீதிமன்றத்திற்கு அதிர்ச்சி அளிக்கிறது:’

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டாசு ஆலை தீ விபத்துகள் தொடர்பாக 69 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகள் தொடர்பான வழக்குகள் விபத்துகள் நடந்த பின்பே பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளூரில் கொட்டகை அமைத்து உரிமம் இன்றி வி.ஏ.ஓ மற்றும் போலீசாருக்கு தெரியாமல் இவ்வளவு நாட்களாக பட்டாசு ஆலை இயங்கியது நீதிமன்றத்திற்கு அதிர்ச்சி அளிக்கிறது.

‘மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை’

ஒருபுறம் சட்டவிரோத பட்டாசு ஆலைகளை கட்டுப்படுத்த வி.ஏ.ஓ.க்கள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. மாவட்டத்தில் சட்ட விரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்விரு வழக்குகளிலும் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் அந்தந்த வி.ஏ.ஓ.க்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ளது என தெரிகிறது. பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்பான வழக்குகளை ஒருங்கிணைத்து கையாள விருதுநகர் டி.எஸ்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து இவ்விரு வழக்குகளிலும் நியாயமான விசாரணை அறிக்கையை இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

court order

‘உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு தேவையான ரசாயனங்கள் எப்படி கிடைக்கிறது?’

இரு கிராமங்களில் நியமிக்கப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் கிராமங்களில் வசிக்கின்றனரா? என்பதை விசாரணை அதிகாரி கண்டுபிடிக்க வேண்டும். உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு தேவையான ரசாயனங்கள் எப்படி கிடைக்கிறது என கண்டுபிடிக்க வேண்டும். இது குறித்து விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கின் சூழ்நிலையை கருதி மனுதாரர்களுக்கு ஜூன் 7 வரை இடைக்கால ஜாமீன், முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது

என உத்தரவிட்டுள்ளார்.