செய்தியாளர்: எம்.சுதீஸ்
சென்னைச் சேர்ந்த சங்கர் என்பவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். சவுக்கு சங்கர் மற்றொரு யூடியூப் சேனலில் பெண் காவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் கோவை சைபர் க்ரைம் காவல்துறை, சவுக்கு சங்கரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ள நிலையில், மதுரை போதை தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.