செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை  File Image
தமிழ்நாடு

அமலாக்கத்துறை வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 4ஆம் தேதி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில், குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களின் விவரங்கள் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே மனுவை நிராகரிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Minister Senthil Balaji

அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கௌதமன், “அமலாக்கத் துறையின் பதில் மனுவை ஏற்கக் கூடாது. வங்கி ஊழியர்களின் விவரங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்யக் கூடாது” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை அடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி கார்த்திகேயன் அறிவித்தார்.

மேலும், விசாரணைக்கு ஆஜராகாத அரசு தரப்பு சாட்சியான கணினி தடயவியல் பிரிவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் மீது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, வழக்கு விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

court order

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகி இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சுமார் 40 நிமிடங்கள் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்தார். அமலாக்கத்துறை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம், அண்மையில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.