செய்தியாளர்: வி.பி.கண்ணன்
கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் “அந்த நிலம் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்காக பதிவு செய்யப்பட்டது. என்னை சிலர் மிரட்டுகின்றனர்” என மேலக் கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 9-ஆம் தேதி புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் யுவராஜ், ரகு, செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூன் 15-தேதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து இவ்வழக்கில், 35 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகிய இருவரையும் கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து அவரை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பிறகு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் என்பவர், கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் ஒருபுகார் அளித்தார். அதில், “முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலிச் சான்று அளித்து அவரது ஆதரவாளர்கள் 4 பேர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததோடு, அவரது ஆட்களை வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்” என கூறியிருந்தார். அதன் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன், உள்ளிட்ட 13 பேர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று எம்ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் வந்தது. இதற்காக எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிசிஐடி போலீசார், “இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதால் ஏழு நாட்கள் போலீஸ் காவல் அளிக்கவும்” என மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு இரண்டு நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.
“விசாரணையின் போது எம்ஆர்.விஜயபாஸ்கரின் தரப்பு வழக்கறிஞர்கள் உடன் இருக்கலாம். விசாரணைக்கு எந்தவித இடையூறும் செய்யக் கூடாது” எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் எம்ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.