சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளை அகற்ற உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பு விளக்கம் அளித்தது.
அப்போது, “முன் அனுமதியின்றி இத்தகைய போர்டுகள் மற்றும் தடுப்புகளை வீட்டின் முன்பு வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்” என காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பான விதிமுறைகளை இணையதளம், பத்திரிகை, ஊடகங்களிலும் வெளியிட வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.