Madras High Court pt desk
தமிழ்நாடு

கிண்டி ரேஸ் கோர்ஸ்: வாடகை பாக்கி தொடர்பாக சீல் வைத்த வருவாய்த் துறை – நீதிமன்றம் புதிய உத்தரவு

ஜெ.அன்பரசன்

சென்னை கிண்டியில் அமைந்துள்ள சென்னை ரேஸ் கிளப்புக்கு சென்னை மாகாண அரசு கடந்த 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்தது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1970ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் - கிண்டி தாசில்தாரர் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

Gundy race course

இந்த நோட்டீசுக்கு பதிலளித்த ரேஸ் கிளப் நிர்வாகம், 1946ம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை என விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, ரூ. 730,86,81, 297 (ரூ.சுமார் 730 கோடி) வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கிளப்புக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகையை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத் 297 ரூபாய் வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தார். தவறினால், மனுதாரரை காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றி, நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

Gundy race course

கடந்த 2004ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி ரூ.12,381,35,24,269 (சுமார் 12 ஆயிரத்து 381 கோடி) ரூபாயை 2 மாதங்களில் செலுத்தக் கூறி ஒரு மாதத்தில் நோட்டீஸ் அனுப்பவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரி செலுத்தாமல் இருந்த கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகம் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குறிப்பாக கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபடாமல் தடுக்கும் விதமாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

court new order

இந்த நிலையில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குத்தகையை ரத்து செய்தது தொடர்பான நோட்டீஸ் வழங்கி, பின்னர் காலி செய்வதற்கான அவகாசம் கொடுத்த பின்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ரேஸ் கோர்ஸ்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.